சைக்கோ சீரியல் கொலைகாரர்கள் அடிப்படையில் எக்கச்சக்க ஹாலிவுட் படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் அது அவ்வளவாகப் போகாத இருட்டான பாதைதான். அந்த வழி போனவர்களும் ஏற்கனவே போனவர்கள் பின்னாடியேதான் போயிருக்கிறார்கள். 'இமைக்கா நொடிகள்' ஒரு சைக்கோ கொலைகாரரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படம். புது வழியா, அதே வழியா பார்ப்போம்.

பெங்களூரில் தொடர் கொலைகள் நடக்கின்றன. சில காலத்துக்கு முன்பு தாங்கள் கொலை செய்துவிட்டதாக நம்பும் சீரியல் கில்லரின் பாணியிலேயே இந்தக் கொலைகளும் நிகழ்வதால் குழப்பமடைகிறது காவல்துறை. கொலைகளைத் துப்பறிய சிபிஐ அதிகாரி நயன்தாரா, அவரது டாக்டர் தம்பியாக அதர்வா, வில்லனாக ஹிந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், கொஞ்ச நேரமே வரும் விஜய் சேதுபதி இவர்களுடன் இரண்டு, மூன்று ஃப்ளாஷ்பேக்குகள் இரண்டு மூன்று ட்விஸ்ட்டுகள் கொண்ட, இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது த்ரில்லர் முயற்சி 'இமைக்கா நொடிகள்'.

நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கப்படுவதற்கு முழு தகுதியடைந்துவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு, சிபிஐ அதிகாரியாக ஸ்டைலாக அழகாக வலம் வருகிறார். அவரது தம்பியாக அதர்வா. கதாபாத்திரத்தின் அளவிலும் நடிப்பிலுமேன எல்லாவற்றிலும் தம்பியாகத்தான் இருக்கிறார். அதர்வாவின் நடிப்புத் திறமைக்கு முழு தீனி போடவில்லை இந்தப் படம். சில காட்சிகளில் தன்னை நிரூபிக்கிறார். வில்லன் அனுராக் காஷ்யப் ஒரு சூப்பர் சர்ப்ரைஸ், அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் சிறப்பு. என்றாலும் இரண்டும் சில காட்சிகளில் அந்நியமாகத் தெரிவது போன்ற உணர்வு. சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் உற்சாகமளிக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், அவர் வரும்பொழுது படம் முக்கால் காலத்தைத்தாண்டி நாம் சற்றே அயர்ச்சியில் இருக்கிறோம். அதர்வாவின் காதலியாக ராஷி கண்ணா, அழகான வரவு. தெலுங்கில் அதற்குள் டாப்பிற்கு சென்று விட்டாராம்.

பரபரப்பாகத் தொடங்கும் படம், இடையிடையே வரும் ஃப்ளாஷ்பேக்குகளால் தொய்வடைந்து இறுதியில் ஒரு நல்ல ட்விஸ்ட்டுடன் நிறைவடைகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் முதல் படமான 'டிமான்டி காலனி', சிறிய பட்ஜெட், செட்-அப்பில் ஒரு சிறந்த த்ரில்லர் படம் எடுக்க முடியுமென்பதற்கு உதாரணம். கதையை விட்டு சற்றும் விலகாத படம் அது. எந்த ஒரு காட்சியையும் தேவையில்லாதது என்று கூற முடியாது. ஆனால், 'இமைக்கா நொடிக'ளில் அப்படிப்பட்ட காட்சிகள் சற்று அதிகம். அதர்வாவின் காதல் தேவைதான், ஆனால் அது இவ்வளவு நீளம் தேவையா? அதுபோலத்தான் இன்னும் சில காட்சிகளும். அவை தவிர்க்கப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காவல்துறை- சிபிஐயின் எல்லை அவ்வளவு, ஒரு தனி மனிதனால் ஒரு மாநகரத்தில் எவ்வளவு விஷயங்களை கட்டுப்படுத்த முடியும் போன்ற கேள்விகளையெல்லாம் நாம் மறந்துவிட்டுத்தான் பார்க்கவேண்டும். குரு முருகதாஸின் தாக்கம் ஆங்காங்கே தெரிகிறது. பிரம்மாண்டத்தில் இருந்த கவனம், உணர்வுகள் ரசிகர்களை சென்றடைய வேண்டுமென்பதில் இல்லையோ என்று எண்ணவைக்கின்றன த்ரில்லர் காட்சிகள்.
ஹிப் ஹாப் தமிழா இசையில் இரண்டு பாடல்கள் சிறப்பு, பின்னணி இசையும் தேவையான பதற்றத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, படத்தின் தரத்தை உயர்த்தி நாம் பார்க்காத நிறத்தில் பெங்களூரைக் காட்டுகிறது. புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு காட்சிகளை சரியாகக் கோர்த்திருக்கிறது. ஆனால், எடிட்டிங்கில் தவறா, இயக்குனரின் எழுத்தில் தவறா என்று எண்ணவைக்கிறது படத்தின் நீளம்.
இமைக்கா நொடிகள், ரன்னிங் அதிகம், த்ரில்லிங் சற்றே குறைவு!