யுவன் சங்கர் ராஜா, கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியின் 25வது ஆண்டு விழாவிற்கு கலந்து கொள்ள சென்றுள்ளார். இதனை முன்னிட்டு கல்லூரி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள சுமார் 15,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வந்த 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த மாணவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 3 மாணவிகள் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
பின்பு உள்ளே நுழைய முற்பட்ட 1000 மாணவ மாணவிகளை அங்கிருந்த போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் தடுத்தனர். இதனை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா கார் சென்ற வழியாக காருக்கு பின்னால் மாணவர்கள் சென்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை பெண் சிறப்பு உதவியாளர் ஃபிலோமினா கீழே விழுந்துள்ளார். அவரை மிதித்து சென்று மாணவர்கள் உள்ளே செல்ல முயன்றபோது அந்த பெண் காவலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இரு மாணவர்கள் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணவ மாணவிகளிடையே தள்ளு முள்ளு, பெண் காவலர் மூச்சு திணறல், இரு மாணவர்கள் மயக்கம் என தொடர்ந்து நடைபெற்ற இச்சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.