வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6 ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் விஜய், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தால் தான் திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆதவ் அர்ஜுனா மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் எனப் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதவ் அர்ஜூனா, வி.சி.க.வில் இருந்து இருந்து 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் தலைவர்களைத் தாண்டி திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இயக்குநர் மற்றும் நடிகர் அமீர், ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் பகிர்ந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், “செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் மக்களுக்கு என்றைக்குமே நண்மை தராது. ஆதவ் அர்ஜூனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பாடலாசிரியர் யுக பாராதி அந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீன் போர் தொடர்பாக ராப்பர் தினேஷ் எழுதி பாடியுள்ள 'மௌனம் கலைப்போம்' பாடல் வெளியீட்டு விழாவில் யுகபாரதி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். அப்போது அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழா தொடர்பாக பேசிய அவர், “கார்ப்பரேட் கைகளுக்குள் நம்முடைய சமூகம் சிக்கி கொண்டிருக்கிறது. இது குறித்து நம்முடைய மௌனத்தை கலைக்க வேண்டும். நம்முடைய மைனத்தை கலைக்க வில்லை என்றால் யார் யாரோ எதை எதையோ கத்திக் கொண்டே இருப்பார்கள். நாம் கேட்பவர்களாக மாறி போய்விடுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராப் கலைஞனுக்கு குரல் வலம் இருக்க வேண்டும். எழுத்தாற்றல், அரசியல் அறிவு, தத்துவ பின்புலம் என அனைத்தும் இருக்க வேண்டும். அப்படி ஒரு ஆளாக தினேஷ் தன்னை மாற்றி கொண்டார். அவர் திரைப்படங்களிலும் இது போன்ற பாடலை எழுத வேண்டும். இங்கு வந்து விஜய் முகத்தில் அம்பேத்கரை பார்த்தேன் என எழுதினால் அது காமெடி ஆகிவிடும்” என சிரித்துக் கொண்டே போகிற போக்கில் விஜய்யை தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.