Skip to main content

“ஒரு நாளைக்கு 10 லட்சம்,15 லட்சம் சம்பளம் வாங்குகிறேனா?”- விளக்கமளித்த யோகிபாபு

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகி பாபு பல லட்சங்கள் ஒரு நாளுக்கு சம்பளமாக வாங்குகிறார் என்று பலரால் சொல்லப்படுகிறது. அது குறித்து வெளிப்படையாக தர்மபிரபு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் யோகி பாபு.
 

yogi babu

 

 

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனினி ஐயர், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு'. யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை போல பிரதான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து வெளியாக இருப்பது சாம் ஆண்டன் இயக்கத்தில்  ‘கூர்கா’ படம் ஆகும்.
 

“'தர்மபிரபு' படத்தில் 2 ஹீரோக்கள். மேலோகத்தில் எமதர்மனான நானும், பூலோகத்தில் ஷாம் என இருவருமே ஹீரோக்கள்தான். எங்கள் இருவருக்குள் நடக்கும் கதையே இப்படம். முத்து சார் இங்கு என்னைப் பற்றி நிறையப் பேசினார். நிறைய உண்மைகளைச் சொல்லாதீங்க சார். நாங்கள் இருவருமே 15 ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறோம்.
 

லொள்ளு சபாவில் இருக்கும் போது 300 ரூபாய் சம்பளமாக வாங்கியது உண்மை. ஒரு சில நாட்கள் சம்பளமே இல்லாமல் மொட்டை மாடி நிலா வெளிச்சத்தில் சாப்பிடாமல் படுத்திருக்கிறோம். அப்போது பூந்தமல்லி பக்கத்தில் நசரத்பேட்டையிலிருந்து வருவேன். நான் சென்னைவாசி, அவர் வெளியூரிலிருந்து இங்கு வந்து நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கியிருப்பார். அதைப் பற்றியெல்லாம் நிறைய பேச வேண்டாம் காமெடியாகவே பேசிவிடுவோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு இக்கதையைப் பற்றி நாம் பேசினோம். இன்றைக்கு அது ஜெயிக்கப் போகிறது எனும்போது சந்தோஷமாக இருக்கிறது.
 

'தர்மபிரபு' தொடங்கிய சமயத்தில் தான் 'கூர்கா' படமும் தொடங்கப்பட்டது. இங்கு முத்து சார், அங்கு சாம் ஆண்டன் சார். இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்று 45 நாட்கள் தூங்காமல் முடித்துக் கொடுத்தேன். 1 மணி நேரம்தான் தூங்குவேன். சில நாட்கள், கேமராவில் முகம் ரொம்ப டல்லாக இருக்கிறது என்று ஒளிப்பதிவாளர் சொல்வார். அதன்பின் இயக்குனர், ஒரு மணி நேரம் தூங்கிவிட்டு வாருங்கள் என அனுப்பிவிடுவார்கள்.
 

என்னதான் தூங்காமல் கொள்ளாமல் டல்லாக இருந்தாலும் எமதர்மன் கெட்டப் போட்டவுடம் செம திமிர் வந்துவிடும். சில காட்சிகள் தூங்காமல், கம்பீரமாக நடித்திருப்பேன். அந்த சமயத்தில் எல்லாம் எமதர்மன் உள்ளே இறங்கிட்டார்னு நினைக்கிறேன். ஏனென்றால், பெரிய பெரிய ஜாம்பவான்கள் பண்ணிய கதாபாத்திரம் அது. இந்த ஜெனரேஷனில் எனக்கு எமதர்மன் கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி. என்னுடைய திரையுலக வாழ்க்கையில் அழிக்க முடியாத ஒரு படமாக இருக்கும். என் வாழ்க்கையில் 'ஆண்டவன் கட்டளை', 'பரியேறும் பெருமாள்'  வரிசையில் இப்படம் அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
 

ஞானவேல்ராஜா சார் இங்கு, எனக்கு ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், 15 லட்சம் என்று பேசினார். வருமான வரியே இன்னும் 20 லட்சம் கட்டாமல் இருக்கிறேன். யாரிடம் இருந்தும் பணம் வரவில்லை, கேட்டுட்டு இருக்கேன். 10 லட்சம், 15 லட்சம் சம்பளம் எல்லாம் கேட்கவில்லை. 2000 ரூபாய், 3000 ரூபாய் சம்பளத்துக்கு வந்தவன் நான். தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவன். நேற்றிரவு கூட ஒரு பையனிடம் பேசும்போது, அவனது குடும்பத்தைப் பற்றி சொன்னான். தஞ்சாவூர் அண்ணா எனக்கு, நான் ஜெயித்தால்தான் என் குடும்பம் தலைநிமிரும் என்று பேசினான். நான் உனக்கொரு அண்ணன் மாதிரி என்று உடனடியாக தயாரிப்பாளரிடம் பேசினேன். என்னுடைய பேமன்டை பாதி பண்ணிக்கோங்க, அந்தப் பையனுக்கு ஒரு நல்வழி பண்ணிக் கொடுப்போம் சார் என்று சொன்னேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்