Skip to main content

திரைப்படம் பார்த்து தேம்பி அழுத யோகி ஆதித்யநாத்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Yogi Adityanath shed tears watching the kangana tejas movie

 

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தேஜஸ். ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தில் அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷஷ்வத் சச்தேவ் இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். போர் விமானங்களை ஓட்டும் பெண் விமானியாக கங்கனா நடித்துள்ள இப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. 

 

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. வசூலிலும் வரவேற்பு இல்லை. மேலும் அதிக கூட்டம் வராததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த கங்கனா, "கரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது” என்று தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் வைத்திருந்தார். இருப்பினும் திரையரங்குகளில் சரிவர கூட்டம் வரவில்லையென கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் லக்னோவில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் உத்தரப்பிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் கங்கனாவும் கலந்து கொண்டார். இந்த படத்தை பார்த்து யோகி ஆதித்யநாத் அவரது கண்ணீரை அடக்க முடியாதபடி இருந்ததாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரகாண்ட் முதல்வர் படத்தை பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.