தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகவும் நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ், அவர் இயக்கிய படத்தின் கதையை விக்ரம் கதையுடன் தொடர்பு படுத்தி ஒரு யுனிவர்ஸை உருவாக்கியிருந்தார். அதனை ரசிகர்கள் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' எனக் குறிப்பிட்டு வரும் நிலையில் 'தளபதி 67' படமும் அந்த பாணியில் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தென்னிந்திய அளவில் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து தற்போது கே.ஜி.எஃப் பட புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீலும் அவரது வரும் படங்களில் புது யுனிவர்ஸ் உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரஷாந்த் நீல், தற்போது பிரபாஸை வைத்து 'சலார்' படத்தை இயக்கி வரும் நிலையில், கேஜிஎஃப் கதையையும் சலார் கதையையும் தொடர்புப்படுத்தி ஒரு புது யுனிவர்ஸை உருவாக்கியுள்ளாராம். அதனால் ராக்கி பாய் கதாபாத்திரம் இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருவதால், யஷ் அதில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரபாஸையும் யஷ்ஷையும் ஒரே திரையில் காண அவர்களது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
'சலார்' படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரிவித்ராஜ் வில்லனாக நடிக்கும் இப்படம் பெரும் பொருட் செலவில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் 'பிரஷாந்த் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதைப் பார்க்க கன்னட மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.