எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், 'அங்கிள்' என்ற மலையாள திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
எந்த மொழியாக இருந்தாலும் மாறுபட்ட கதை, மாறுபட்ட கதாபாத்திரம், மாறுபட்ட கதைக்களத்தில் படம் எடுத்தால் அந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும். மம்முட்டி நடிப்பில் 2018ஆம் ஆண்டு 'அங்கிள்' என்று ஒரு படம் வெளியானது. அந்தப் படத்தின் கதையே உணர்வுப்பூர்வமாக இருக்கும். மம்முட்டி கதாநாயகனாகவும் கார்த்திகா முரளிதரன் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். ஜாய் மேத்யூ தயாரிக்க, கிறிஸ் தாமோதரன் இயக்கியிருந்தார்.
காரில் மம்முட்டி பயணம் செய்துகொண்டு வருவார். கல்லூரி மாணவியான கதாநாயகி அவருடன் இணைந்து காரில் பயணிக்கிறாள். அந்தக் கார் பயணத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மொத்த கதை. கதாநாயகி ஸ்ருதிக்கு சொந்த ஊர் கோழிக்கோடு. ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்ததால் கல்லூரிக்கு விடுமுறை விடப்படும். ஹாஸ்டலையும் மூடிவிடுவார்கள். அப்போது பேருந்து ஓட்டுநர்களும் ஸ்ட்ரைக் செய்ததால் பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டுவிடும். அதனால் ஊருக்கு கிளம்பிச் செல்வதில் கதாநாயகி ஸ்ருதிக்கு சிக்கல் ஏற்படும்.
அந்த நேரத்தில் கதாநாயகன் கிருஷ்ணகுமார் காரில் வருவார். அவர் மும்பையில் தொழிலதிபராக இருப்பார். கதாநாயகனும் கதாநாயகியின் அப்பாவும் ஒருகாலத்தில் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கிருஷ்ணகுமாருக்கும் ஸ்ருதிக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தது. அதனால் ஸ்ருதியை பார்த்ததும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று ஹீரோ கேட்பார். அவள் நிலைமையை எடுத்துச் சொன்னதும் நான் கோழிக்கோடுதான் போகிறேன் என்று சொல்லி அவளை காரில் ஏற்றிக்கொள்வார். அங்கிருந்து பயணம் தொடங்கும். கிருஷ்ணகுமார் அங்கிள் காரில் வருகிறேன் என்று வீட்டிற்கும் ஸ்ருதி தகவல் கொடுத்துவிடுவாள்.
கல்லூரி காலத்தில் மம்முட்டியின் கேரக்டர் பெண்களிடம் ஜொல்லுவிடக்கூடிய கேரக்டர். எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளை அடைய வேண்டும் என்று நினைப்பார். அப்படிப்பட்டவருடன் நம் மகள் தனியாக வருகிறாளா என்று கதாநாயகியின் அப்பாக்கு பயம் வந்துவிடும். அடர்ந்த காடுகள் வழியாக பயணம் செய்துவர வேண்டும், நம் மகள் பாதுகாப்பாக வருவாளா என்று அவருக்குள் ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். காட்டு வழி பாதை என்பதால் அடிக்கடி சென்போன் சிக்கலும் கட்டாகிவிடும்.
ஒருகட்டத்தில் பயணத்தை தொடரமுடியாது என்பதால் அங்கிருக்கும் ஒரு வீட்டில் தங்கவேண்டிய நிலை ஏற்படும். அது கணவனும் மனைவியும் வசித்துவரும் ஒரு தமிழரின் வீடு. நாயகன் மம்முட்டிக்கு அவர்கள் நன்கு தெரிந்தவர்கள். யாரென்றே தெரியாதவர்கள் வீட்டில் தங்குவதில் கதாநாயகிக்கு கொஞ்சம் பயம் வந்துவிடும். படம் பார்க்கும் நமக்கே ஒரு விதமான பயம் வந்துவிடும். ஆனால், எந்த அசம்பாவிதமும் நடக்காது.
காலை பொழுதுவிடிந்ததும் இருவரும் கிளம்பிச் செல்வார்கள். வழியில் கதாநாயகனும் கதாநாயகியின் அப்பாவும் இளம்வயதில் பொழுதைக் கழித்த ஒரு ஏரி இருக்கும். அந்த இடத்திற்கு போவோமா என்று மம்முட்டி கேட்க அவளும் சரி என்று சொல்வாள். இருவரும் அந்த இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்துக்கொண்டு இருக்கையில், வயது அதிகமுள்ள ஒருவர் எதோ ஒரு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துவந்து அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என்று நினைத்து அந்தப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள். பின், போலீஸ் வந்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்துவார்கள். கதாநாயகியின் அப்பாவுக்கு போலீஸ் கொடுத்த தகவலையடுத்து, அவரும் குடும்பத்துடன் வந்துவிடுவார்.
பின்னர், அவர் குடும்ப நண்பர் என்பதை கதாநாயகியின் அம்மா எடுத்துச் சொல்லி அனைத்து குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பார். அந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டல் அள்ளியது. பின், மம்முட்டியிடம் கதாநாயகியின் அப்பா, காலேஜ் டைம்ல நீ கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் என் பொண்ணு உன்னோட தனியா ட்ராவல் பண்ணிவரனும் என்பதை நினைத்து ரொம்பவே பயந்துட்டேன்டா என்று கூறுவார். அதற்கு மம்முட்டி, என்னடா பேசுறா காலேஜ் டைம்ல நான் அப்படி இப்படி இருந்தது உண்மைதான். இது உன் மகள்டா, உனக்கு மகள் என்றால் எனக்கும் மகள்தானடா என்று சொல்லுவார். படத்தின் இந்த க்ளைமேக்ஸ் காட்சி அவ்வளவு உணர்வுப்பூர்வமாக கவித்துவத்துடன் இருக்கும்.
நம்முடைய தமிழ்ப்பட இயக்குநர்களும் இது மாதிரியான வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுக்கவேண்டும். பிரம்மாண்டமாக செலவழித்து, நிறைய கதாபாத்திரங்களை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என்றில்லை. ஒரு கார், இரண்டு கதாபாத்திரத்தை வைத்தும் அற்புதமான படங்களை எடுக்கலாம் என்பதற்கு 'அங்கிள்' திரைப்படம் உதாரணம்.