எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தையொட்டி எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் வெற்றிப்படமா தோல்விப்படமா என்று விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு படம் நல்ல படமாக இருந்தால் அதை மக்களே விரும்பிப் பார்ப்பார்கள். அந்தப் படத்தை ஓட வைப்பதற்கு செயற்கையான விளம்பரங்கள் எதுவும் தேவையில்லை. ஒரு சாரார் படம் வெற்றிப்படம் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு சாரார் எதிர்மறையான விமர்சனங்கள் கொடுத்து இது தோல்விப்படம் என்கிறார்கள். ரஜினிகாந்த் படத்திற்கு இது மாதிரியான நிலை தேவையா?
‘அண்ணாத்த’ வெளியானபோது சொல்லிக்கொள்ளும்படி பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ‘ஜெய் பீம்’ திரைப்படம் ‘அண்ணாத்த’ படத்தோடு இணைந்து வெளியாகிருந்தால், ‘அண்ணாத்த’ படம் காணாமல் போயிருக்கும். இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்பதுதான் படம் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. இயக்குநர் சிவா, தான் இயக்கிய முந்தைய படங்களின் காட்சி மற்றும் பிற படங்களிலிருந்து சில காட்சிகளை எடுத்துக்கொண்டு கலவையான அவியல் மாதிரி இந்தப் படத்தை எடுத்துள்ளார். ரஜினிகாந்த் என்ற உச்ச நட்சத்திரத்தை வைத்து படம் இயக்குகிறோம் எனும்போது இயக்குநர் சிவா இன்னும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ரஜினி, கமல்ஹாசனை வைத்து படம் இயக்குவது என்பது எளிதானதல்ல. ‘முரட்டுக்காளை’, ‘போக்கிரி ராஜா’, ‘ராணுவ வீரன்’, ‘தங்கமகன்’, ‘மூன்று முகம்’ மாதிரியான மசாலா படங்கள் 80, 90களிலேயே ரஜினி பண்ணிவிட்டார். பின், ‘பாட்ஷா’ மாதிரியான ஹைடெக்கான மசாலா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட எல்லா கதைக்களங்களிலும் ரஜினி நடித்துவிட்டார். அதேபோல கமல்ஹாசனும் எல்லா கதைக்களங்களிலும் நடித்துவிட்டார். இவர்கள் இருவருடைய சமீபத்திய படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஒருகட்டத்தில் இந்தப் பிரச்சனை எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கே இருந்தது. கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.
நல்ல இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்படங்களை எப்படி கொடுப்பது என்று ரஜினிகாந்திற்கு குழப்பமாக உள்ளது. தனக்கு 100 கோடி சம்பளம், அதுபோக படத்தின் பட்ஜெட்... இதையெல்லாம் திரும்ப வசூல் செய்யும்படியான கதையை எப்படி தேர்ந்தெடுப்பது என ரஜினி பெரும் குழப்பத்தில் உள்ளார். மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’, ‘புலி முருகன்’ மாதிரியான கதைகளில் இனி ரஜினி நடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களை இயக்கக்கூடிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். இனி அந்த மாதிரியான கதைகளில்தான் ரஜினியை வைத்து வெற்றிப்படம் கொடுக்க முடியும். அதற்கான ஆற்றல் ரஜினிகாந்திடம் இருக்கிறது."