விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் சர்கார் படத்தின் கதை தனது ‘செங்கோல்’ என்ற கதையில் இருந்து திருடப்பட்டது என்று திரைத்துறையில் துணை இயக்குநராக இருக்கும் வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே செங்கோல் கதையை பதிவு செய்து வைத்துள்ளதாக வருண் தனது புகாரில் கூறியுள்ளார். செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றே என்று எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜும் தெரிவித்துள்ளார். ஆனால், சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இக்கதை திருடப்பட்டது அல்ல. இது என் கதைதான் என்கிறார்.
பிரச்சனை சூடாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் 'சர்கார்' படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளவரும் கதைக்குழுவில் முக்கியமானவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இதுகுறித்து தெரிவித்திருக்கும் கருத்து...
"ஏ.ஆர்.முருகதாஸ் கொண்டு வந்தது ஒரே ஒரு வரி கதைதான். சார், சிவாஜி சார் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டுருக்காங்க சார். அப்படியிருக்கும்போது நம்ம ஹீரோ ஓட்டை கள்ள ஓட்டு போட்டுட்டா ஹீரோ என்ன பண்ணுவார்? இந்த வரியைதான் நான், முருகதாஸ், அவரது உதவி இயக்குனர்கள் எல்லோரும் சேர்ந்து சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் 42 நாட்கள் தங்கி ஒரு திரைக்கதையாக உருவாக்கினோம். இப்படி நடந்தா, விஜய் என்ன பண்ணுவார், நம்ம ஹீரோ என்ன பண்ணுவார் என்று பேசிப் பேசி உருவானதுதான் சர்கார். அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை எல்லாம் சேர்த்து முழுமையாக்கினோம்."
மேலும் அவரது இணையதளத்தில் இந்தப் பிரச்சனை குறித்து,
"இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள், பேரங்கள். இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X வென்றவன் என்ற முடிச்சு. ’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா”. நாம் எங்கே அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில்"
என்று எழுதியுள்ளார்.