Skip to main content

“நூறு ட்ரஸ் எடுக்க 300 ட்ரஸ் ரிஜெக்ட் பண்ணோம்” - ‘தி லெஜண்ட்’ ஆடைவடிவமைப்பாளர்

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

sathya nj

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி மற்றும் தற்போது வெளியான லெஜெண்ட் என பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் சத்யா என் ஜெ. நக்கீரன் ஸ்டூடியோ யூ ட்யூப் பக்கத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டியில் லெஜெண்ட் திரைப்படத்தை பற்றி அவர் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்...


"லெஜெண்ட் படத்திற்கு முன்பே சரவணன் சாரின் ஆரம்பக்கட்ட விளம்பரப் படங்களில் இருந்து நான் தான் அவரது ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளேன். அப்பொழுதே சார் வருங்காலத்தில் ஒரு படம் பண்ணுவார் என்பது தெரியும். ஆனால் அது இத்தனை சீக்கிரம் நடக்கும் என்பது எதிர்பாக்கவில்லை. அவரின் விளம்பர படங்கள் வந்து கொண்டிருந்த காலத்திலேயே இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி என்னிடம் 'சரவணன் சாருடன் திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம்' என கூறினர். அது 2020 ல் முடிவாகி இப்போது வெளி வந்துள்ளது.


படம் பார்த்தவர்களில் பலர் நிமிடத்திற்கு நிமிடம் காஸ்ட்யூம் மாறிக்கொண்டு இருந்ததை பற்றி கேட்டனர். இந்த விஷயத்தில் லாஜிக் என்ற ஒன்றை நாங்கள் பார்க்கவில்லை. முதலிலேயே இயக்குநர்களும் ஹீரோவும் இது கமர்ஷியல் படம் என்பதால் உடைகள் விஷயத்தில் லாஜிக் பற்றி யோசிக்க வேண்டாம், மேலும் கதையின் படி நாயகன் வெளிநாட்டில் இருந்து வருவதால் அவரின் உடைகள் அப்படி இருப்பதில் தவறில்லை, காட்சிக்கு காட்சி ஹீரோ அழகாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் எனக் கூறி விட்டனர் . எனவே நாங்களும் எந்தவிதமான லாஜிக்கும் உடைகள் விஷயத்தில் பார்க்கவில்லை. சாரின் எதிர்பார்ப்பு என்பது படத்தில் அவருடைய தோற்றம் மற்றும் உடைகள் விஷயத்தில் அதிகம் இருக்கும். அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக செலவுகளை செய்யத் தயங்காதவர் அவர். எனவே அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நிறைய உழைக்க வேண்டி இருந்தது.

 
குறிப்பாக அவரது கடைகளில் இருந்து நாங்கள் எந்த உடைகளையும் எடுக்கவில்லை. அவருக்காக தனியாகவே வடிவமைத்தோம். அவருடைய அளவு எக்ஸ்ட்ரா ஸ்மால் என்பதால் தனியாக வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தது. அவருக்கு கச்சிதமாக அணிய பிடிக்கும் என்பதால் அதற்கேற்றவாறு வடிவமைத்தோம். படத்திற்காக குறைந்தது நூறு ஆடைகளை வடிவமைத்தோம் ஆனால் அதை தேர்வு செய்ய அதை தாண்டி நிராகரிக்கப்பட்டது மூன்று மடங்கு இருக்கும் " என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்