பிரபல பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். சொந்தமாகத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் 32.25 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதனைத் திருப்பி தரும் வகையில் நடிகை அமீஷா பட்டேல் 2 தவணையாக அந்நிறுவனத்திற்கு செக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக்கில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் அதிர்ச்சியடைந்த யுடிஎப் டெலி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மத்தியப் பிரதேச போபால் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் நடிகை அமீஷா பட்டேல் முறையாக ஆஜராகாமலிருந்தார். இது தொடர்பான வழக்கு நேற்று (1.12.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகை அமீஷா பட்டேலுக்கு நீதிபதி ஜாமீன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். மேலும் வரும் 4 ஆம் தேதி கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.