சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகும் குறும்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதோடு, அதுகுறித்த தாக்கத்தையும் அதிகளவில் ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக (War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்று உருவாகியுள்ளது.
இந்த குறும்படத்தை கே.வி ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய காகா எழுதி இயக்க, ஆரி அர்ஜுனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான ( War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா ஐபிஎஸ் மற்றும் டாக்டர் K.S. பாலகிருஷ்ணன், BVSc ஆகியோர் இன்று(29.6.2022) வெளியிட்டனர். போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்வோரை மீட்க அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாகப் போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் உருவாகியுள்ளது. இது கண்டிப்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.