உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே இருந்துக் கொண்டு மக்களுக்கு வீடியோ மற்றும் சமூகவலைதள பதிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் தற்போது கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு குறித்து பேசியுள்ளார். அதில்...
''இந்த ஊரடங்கு ஏன் தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டும். எப்போது தமிழக அரசு மற்றும் இந்திய அரசு சொல்வதை ஒழுங்காக கடைப்பிடிக்கிறோமோ அன்றைக்குதான் நம்மால் வெளியே வர முடியும். அதனால்தான் இந்த ஊரடங்கு தொடர்கிறது. நமக்கு தொற்று எண்ணிக்கை குறைந்து பூஜ்ஜியம் என வர வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையாக வெளியே வந்திருக்கிறோம் என்று அர்த்தம். அப்போதுதான் நாமும் வெளியே வருவதற்கு அரசு உதவி செய்யும். முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்கத் தவறிய காரணத்தால்தான், இந்த ஊரடங்கு தொடர்கிறது. எங்கு போனாலும் பைக்கில் நிறைய நண்பர்களுடன் பயணிப்பது, பயங்கரக் கூட்டத்தில் போய் காய்கறிகள் வாங்குவது ஆகியவற்றை தினமும் காணொலியில் பார்க்கிறோம்.
இப்படியிருக்கும் வரைக்கும் நம்மால் ஊரடங்கை நிறுத்தவே முடியாது. நாம் வீட்டிற்குள்ளேயேதான் முடங்கியிருக்க வேண்டியதிருக்கும். ஆகவே, நாம் இப்போது ரொம்ப முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தமிழகத்தை சார்ந்த அனைத்து மக்களே, நண்பர்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முழுமையான ஊரடங்கை பின்பற்றி, எப்படியாவது இந்த தொற்று குறைந்து, தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற நிலை வரும் போதுதான் நாம் வெளியே வர முடியும். அது நமது கையில்தான் இருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும். சிங்கப்பூரில் உள்ள ஆய்வின்படி, மே மாத இறுதியில் உலகத்துக்கே இதிலிருந்து விடிவு கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதேபோல் நமக்கு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் தமிழக அரசுடன், இந்திய அரசுடன் ஒத்துழைப்போம்" என்றார்.