Skip to main content

"நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிக்க வேண்டும்" - ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநருக்கு நீதிமன்றம் அதிரடி

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Vivek Agnihotri offers unconditional apology for contempt of court

 

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடைபெற்றபோது., பீமா கோரேகானில் உள்ள நினைவுத்தூண் அருகே ஆயிரக்கணக்கான தலித்துகள் கூடியிருந்தனர். அப்போது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் மற்றும் கல்வீச்சில் பல வாகனங்கள் உடைக்கப்பட்டன. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்

 

இந்த சம்பவத்திற்கு ஒருநாள் முன்னதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனிவர் வாடாவில் ‘எல்கார் பரிஷத்’ நடத்தப்பட்டது. இதில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், சோனி சோரி, பி.ஜி. கோல்சே பாட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில், பீமா கோரேகான் வன்முறைக்கு இந்தக் கூட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

 

இந்த வழக்கு தொடர்பாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, கடந்த 2018ஆம் ஆண்டு  தனது ட்விட்டர் பக்கத்தில், பீமா கோரேகான் வழக்கில் நீதிபதி எஸ். முரளிதர் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியதாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் விவேக் அக்னிஹோத்ரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் தனது வழக்கறிஞரின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். பின்பு கேள்வி எழுப்பிய நீதிபதி, நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிக்க அவருக்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதா? வருத்தத்தை எப்போதும் பிரமாணப் பத்திரம் மூலம் வெளிப்படுத்த முடியாது. அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று விவேக் அக்னிஹோத்ரியின் வழக்கறிஞர்களிடம் கூறி உத்தரவிட்டார். 

 


 

சார்ந்த செய்திகள்