மதுரையிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் அலுமினி மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் 1978ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், நடிகருமான விவேக் கலந்து கொண்டார். பின்னர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசிய விவேக், தொடர்ந்து மரங்களை நட வேண்டும். அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.
தற்போது மரக்கன்றுகளை நடவு செய்தால்தான் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மூலம் அதிக மழையைப் பெற முடியும்.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மூதாட்டி ஆகி வருகிறது. அரசியான ஊட்டியையும் மூதாட்டியாக மாற்றி வருகிறோம் என்றார்.
அடுத்து அரசியல் எண்ட்ரி குறித்து நடிகர் விவேக்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, சினிமாவில் நான் நடிப்பதன் மூலம் மக்களுக்கு நல்லவிதமான கருத்துகளை தெரிவித்து வருகிறேன். அவை அனைத்தும் நல்லவிதமாக மக்களைச் சென்றடைந்து, மக்கள் என்னை விரும்புவார்களானால் அவர்கள் விருப்பப்படி அரசியலுக்கு வருவேன் என்றார்.