மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34ஆவது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்தது. தூத்துக்குடியில், குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் சொன்ன பிறகு, உடனே 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார் விஷால். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.
பின்பு அடுத்தகட்ட படப்பிடிப்புகள் திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இதனிடையே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில் படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்ததாக கடந்த ஜனவரியில் விஷால் தெரிவித்திருந்தார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் விஷால், ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அப்போது மாணவர் ஒருவர், ஈ.பி.எஸ்ஸா இல்லை ஓ.பி.எஸ்ஸா என கேள்வி கேட்டதையடுத்து ஐ.பி.எஸ் என பதிலளித்தார் விஷால். மேலும், “நான் வணங்குற அந்த ஐ.பி.எஸ்-க்கு...” என சொல்லி சல்யூட் அடித்தார். பின்பு, “என் நண்பன் பேரும் ஐபி செந்தில்குமார். அவரது மனைவி மெர்சி எனக்கு தங்கை மாதிரி. அதனால் ஐ.பி.எஸ்” என்றார்.
இதையடுத்து விஷால் சாப்பிடுவதற்கு முன், மும்மத வழிபாடுகள் செய்வது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பான கேள்வியை மாணவர்களில் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த விஷால், கழுத்தில் அணிந்திருக்கும் ஏசு மாலை மற்றும் கயில் கட்டியிருந்த கயிரை காண்பித்து “இவர் ஜீசஸ் இவரும் சாமி தான். எல்லாம் சாமிதான். பத்து வருஷமா பண்ணிகிட்டு இருக்கேன். யார் சோறு போட்டாலுமே. எல்லா கடவுளும் ஒன்னு தான். அல்லாவும் ஒன்னு தான். சாய் பாபாவும் ஒன்னு தான். ஜீசசும் ஒன்னு தான். அது விளம்பரத்துக்காக பண்ணுறேன், அரசியல் வரப்போகிறேன் அதுக்காக பன்ணுறேன்... அப்படியெல்லாம் கிடையாது. எல்லா சாமியும் ஒரு சாமி தான். அந்த விஷயம் எனக்கு தப்பா எதுவும் தோணல” என்றார்.