Skip to main content

"நேர்மையான பாதைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்" - பிரதமருக்கு விஷால் நன்றி

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

vishal thanked pm modi for mark antony hindi release issue

 

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (28.09.2023) முதல் இந்தியில் வெளியாகியுள்ளது. 

 

இதையடுத்து தணிக்கை வாரிய குழுவில் ஊழல் நடப்பதாக விஷால் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திரையில் ஊழலை காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் நடப்பது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய குழுவின் மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனி இந்தி பதிப்பிற்கு 2 பரிவர்த்தனைகளாக 6.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். 

 

படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இதை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வாய்ப்பே இல்லை. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியது. 

 

இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் விஷால் குற்றச்சாட்டுக்கு, "தணிக்கை குழுவின் மேல் விஷால் வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது. ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது, இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டிருந்தது. 

 

இந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த ஊழல் தொடர்பாக  உடனடி நடவடிக்கைகள் எடுத்ததற்காக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நன்றி. ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும், தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

எனது பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்த முயற்சியை உடனடியாக வெளிக்கொணர்வதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி. ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னைப் போன்ற சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தி உணர்வைத் தருகிறது, ஜெய் ஹிந்த்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்