விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'அதிருதா மாமே' வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட நிலையில், விஷால் பேசியதாவது, "இந்த 19 வருஷத்தில் நீங்க கொடுத்த ஆதரவினால் தான் வெற்றியோ தோல்வியோ சோர்வடையாமல் பயணத்தை தொடர்கிறேன். பொதுவாக என்னுடைய நிகழ்வுகளில் பூங்கொத்து மற்றும் சால்வை கொடுப்பதில்லை. அந்த 1 நிமிடத்திற்காக செலவு பண்ணுகிற பணத்தை விட 100 குழந்தைகள் நிறைவாக சாப்பிடுவது புண்ணியம். வாழ்க்கையில் நாம் எல்லாரும் நண்பர்கள், அப்பா, அம்மா, காதலி என அனைவரிடமும் பொய் சொல்லியிருக்கிறோம். ஆனால் கடவுள் கிட்ட மட்டும் உண்மையை சொல்லிடுவோம். யாருக்கும் தெரியாமல் பிரே பண்ணும் போது உண்மையை சொல்லிடுவோம்.
அதற்கு நிகராக பொய் சொல்லாத நபர்கள் மருத்துவர்களிடம் தான். அவர்களிடம் உண்மையை சொன்னால் தான் வாழ முடியும். கரோனா காலத்தில் அவர்களின் பணி எவ்வளவு முக்கியம் என்பதை பார்த்தேன். அந்த சேவையை கடவுள் பார்த்திருக்கிறார். என் சினிமா கரியரில் முதல் தடவை டபுள் கேரக்டரில் நடிச்சிருக்கிறேன். மார்க் என்ற கதாபாத்திரம் மகன், கலைஞர் ஐயா பீரியட். 1995ல் நடக்கும். ஆண்டனி என்ற கதாபாத்திரம் 1975 எம்.ஜி.ஆர் ஐயா பீரியட். இரண்டு பேருக்கும் இடையே நடக்கிற விஷயம் தான் கதை. அதனால் எல்லாருக்கும் ட்ரீட் இருக்கு" என்றார்.