லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி 2. இப்படத்தை விஷால் தயாரித்திருந்தார். லைகா வெளியிட்டது. இந்த நிலையில் விஷால் லைகா சொத்துகளை முடக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், “சண்டக்கோழி 2 படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்கம் மற்றும் சாட்டிலைட் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியது. 2018ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 23 கோடியே 21 லட்சம் பேசப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் சண்டக்கோழி 2, படத்துக்கான 12% ஜி.எஸ்.டியை லைகா செலுத்தவில்லை. இதனால் லைகா தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இருப்பினும் பல இடங்களில் கடன் பெற்று ரூ.500 கோடி செலவில் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறது.
இந்தியன் 2 படம் வெற்றி பெறாவிட்டால் கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும், அதனால் தனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும். ஆகையால் ஜி.எஸ்.டி மற்றும் அபராதத்தை வட்டியுடன் சேர்த்து 5.24 கோடிக்கான தொகையை லைகா திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கு முடியும் வரை ஆர்.பி.எல் வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என வழக்கின் விசாரணையை 19ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளர். ஏற்கனவே விஷால் மீது லைகா வழக்கு தொடர்ந்து, அது நீண்ட நாட்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.