நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பு, கடனை திரும்ப செலுத்தவில்லை என விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது. விஷாலுக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது. லைகா நிறுவனத்தை தவிர வேற எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை. விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக கணக்கு தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அடுத்த விசாரணையை வருகிற 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.