நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞரிடம், மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்து, படம் வெளியான பிறகும் கடனை ஏன் இன்னும் திருப்பி செலுத்தவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அந்த வழக்கறிஞர், விஷால் ரூ.15 கோடி டெபாசிட் செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்தார். பின்பு லைகா தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை நீதிபதி பி.டி. ஆஷா பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி பி.டி. ஆஷா விசாரிப்பார் எனத் தெரிவித்தார். இதற்கு விஷால் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதி இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பே மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார்.