விஷால் தற்போது துப்பறிவாளன் 2 பட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே சென்னை மயிலாப்பூரில் உள்ள அம்மன் கோயிலில் விஷால் தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “அழைப்பு வந்தது. அதனடிப்படையில் தான் வந்தேன். ஆசீர்வாதம் கிடைத்தது. நானாக கோயிலுக்கு செல்வதை விட யாரென்றே தெரியாத நபர்கள் என்னை கோயிலுக்கு போகச் சொல்லி சொல்வார்கள். அது மாதிரிதான் இந்த கோயிலுக்கு வந்தேன். முதல் முறையாக வந்திருக்கிறேன்.
சமீபத்தில் கூர்கில் உள்ள கோயிலுக்கு சென்றேன். அதற்கு முன்னாடி சமயபுரம் போனேன். இதற்கு காரணம் எதுவும் இல்லை. சாமியை பார்த்தால் மன திருப்தி இருக்கும். மேலும் தைரியத்தை கொடுக்கும். நமது செயல்பாட்டில் நேர்மை இருக்கும். அவ்வளவுதான். ஆன்மீகப் பாதை தவறில்லை. திடீரென கோயிலுக்கு வருவது கிடையாது. எப்போதும் கோயிலுக்கு செல்வது வழக்கம்” என்றார்.
பின்பு விஜய்யின் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மாநாடு ஏற்பாடுகளை பார்க்கும் போது ரொம்ப ஆடம்பரமாக நடப்பதாக தெரிகிறது. விஜயகாந்த் அண்ணனுக்கு பிறகு மக்கள் எதிர்பார்ப்போடு ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய்தான். சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது. கோடிக்கணக்கில் வியாபாரம் இருக்கும் ஒரு நடிகர் அதை விட்டுவிட்டு மக்களுக்கு பணி செய்ய வருவது வரவேற்கத்தக்கது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மாநாட்டில் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
விஜய்க்கு கடவுள் அருள் உண்டு. அது ஜீசசாக இருந்தாலும் சரி, அல்லாவாக இருந்தாலும் சரி, அம்மனாக இருந்தாலும் சரி... அவருக்கு அந்த ஆசீர்வாதம் இருக்கும். அவருக்கு மட்டுமில்லை எல்லாருக்குமே உண்டு” என்றார். சமீபத்தில் விஜய்யின் மாநாட்டிற்கு அழைப்பு வராவிட்டாலும் கலந்து கொள்வேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.