Skip to main content

“வீண் அரசியல் வேண்டாம்” - மத்திய மாநில அரசுக்கு விஷால் கோரிக்கை 

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
vishal about wayanad issue


கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் கடந்த 30ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை அதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 280க்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதில் கண்டுபிடிக்கப் படாதவர்கள் மட்டும் 216 மேற்பட்டோர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து இராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்கள் நிலச்சரிவுக்கு இடையில் பாலம் அமைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் பல்வேறு இயக்கங்களும் பொது மக்களும் தங்களால் முடிந்த நிவாரணத்தை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.

ad

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதுவரை விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, கமல் என நிதியுதவி வழங்கியுள்ளனர். மேலும் விஜய், சூரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளானர். மேலும் கேரள நடிகர்கள் தங்களது படங்களின் பணிகளை தள்ளிவைத்துவிட்டு அவர்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஷால் இப்பேரிடர் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. கேரளாவில் நடந்த துயர சம்பவம் எல்லோருடைய மனதிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாம் ஒவ்வொரு நாட்களையும் கடப்பது என்பது மிகுந்த மன வேதனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இயற்கை முன் மனிதர்கள் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கூட இந்த துன்பமான நிகழ்வை மனது ஏற்க மறுக்கிறது.

சாதி மத பேதமின்றி இந்நிகழ்வில் அனைவரும் கைகோர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை உறவினர்களை தங்களுடைய இருப்பிடத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அந்த மக்களுக்கு நாம் ஒன்றிணைந்து உதவி செய்வோம். இந்த துன்பமான நிகழ்வில் தங்களுடைய உயிரை துச்சம் என நினைத்து மக்களைக் காக்க போராடிவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்நிகழ்வினை வீண் அரசியல் ஆக்காமல் மக்களுக்கு உதவிடும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களைத் தீட்டுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்