2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து, விஷால், கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள், நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதைக் கேள்விப்பட்டேன். உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ நான் குறிப்பிட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் நிச்சயமாக பெயர்களைக் குறிப்பிட மாட்டேன், ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல, திரையுலகில் பரஸ்பர சக கலைஞர்களும் கூட. உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த காரியத்திற்குப் பிறகு, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களை வீட்டிற்குத் திரும்ப வரவேற்பார்கள் என்று நான் விரும்புகிறேன், நம்புகிறேன்.
ஆம், பூமியில் இருக்கும் அத்தகைய மோசமான நபருக்கு பதிலடி கொடுக்க ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்தது முற்றிலும் அசுத்தமானது மற்றும் குறிப்பிடத் தகுதியற்றது, ஆனால் இந்த குறிப்பிட்ட மக்கள் தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக நிறைய அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை, அது குறைந்த ஒன்று. ஆனால் நீங்கள் நரகத்திற்கு போவீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிட விரும்பவில்லை, ஆனால் ஒரு மனிதனாக, பூமியில் உங்களால் நிச்சயமாக, ஒருபோதும் இருக்க முடியாது. இது பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்” என்றார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு, அவர் பேசியது தொடர்பாக வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.