கடலூரில் தனது ரசிகரின் இல்ல விழாவில் கலந்து கொண்டார் விஷால். அவரை காண அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “2015-ன் வெள்ளத்தின் போது பணியாற்றிய எனது ரசிகர்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் வந்துள்ளேன்” என்றார்,
தொடர்ந்து பேசிய அவர், “இந்த வருடம் சினிமா துறை ரொம்ப கஷ்டமான ஆண்டாக இருக்கிறது. அதற்கு காரணம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. பெரும்பாலான படங்களை யாரும் வாங்குவதில்லை. சின்ன படங்களுக்கு சரியான தியேட்டர் கிடைப்பதில்லை” என்றார்.
மேலும், “அரசு சினிமாவில் தலையிடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் ஏன் சினிமாவில் தலையிடனும். அவங்களுக்கு அவசியமே கிடையாது. போன அரசாங்கம் அப்படி இல்லை. ஒரு அரசாங்கம் பொதுப் பணிகளில் ஈடுபட்டாலே போதுமானது. சினிமாவிற்குள் வரவேண்டாம். சினிமா துறை சினிமா துறையாக இருக்கட்டும். நடிகர்களும் நடிகர்களாகவே இருந்துவிடுவோம். அரசியல்வாதிகள் நடிகர்களாகும் போது நடிகர்கள் அரசியல்வாதிகளாகிறோம். நான் அரசியலுக்கு வருவதை மக்கள் தான் முடிவு பண்ண முடியும்” என்றார். அவரிடம் நீட் விவகாரம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அரசாங்கம் தான் அதை முடிவு செய்ய வேண்டும் எனப் பதிலளித்தார். விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.