விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.
இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில் ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த விஷால், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 2026 தேர்தலில் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “வருகிற 26 உலகெங்கும் உள்ள திரையரங்கில் காணப்படுவேன். 2026 தேர்தலில் காணப்படுவேன். ஆனால் 2026-ல் என்னை வரவிடாதீங்க. நீங்க நல்லது பண்ணிட்டா நாங்க நடிச்சிட்டு எங்க வேலையை பார்ப்போம். ஏன் எல்லாருக்கும் வழி கொடுக்கிறீங்க. நீங்க நல்லது செஞ்சிருந்தால் நாங்க ஏன் எங்க தொழில விட்டுவிட்டு உங்க தொழிலுக்கு வரப்போறோம்.
எல்லா கிராமங்களுக்கும் சென்று பாருங்க. அதை பார்த்தாலே இத்தனை பேர் இருக்கும் போது, எதுக்கு இன்னொரு கட்சி, இன்னொரு தலைவன் வரவேண்டும் என யோசிக்க வைக்கும். இதை ஒரு வாக்காளராக, சமூக சேவகரா ஆதங்கத்தோடு சொல்கிறேன். தி.மு.க, அ.தி.மு.க என குறிப்பிட்டு இதை சொல்லவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரே விஷயம் மக்களுடைய அடிப்படை வசதிகள். கார், வீடு, வெளிநாட்டு படிப்பு என மக்கள் கேட்கவில்லை. இதில் என்ன கொடுமை என்றால், மக்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனை, அவர்களுக்கு தனியார் மருத்துவமனை. வரி கட்டுவது மக்கள். அந்த வரி பணத்தில் அவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்வார்களா?. இது போல நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த விஷயங்களையெல்லாம் பூர்த்தி செய்தால், வெறும் வாக்களித்து விட்டு என்னுடைய வேலையை செய்து வருவேன். மாற்றம் கண்டிப்பாக தேவைப்படுகிறது” என்றார்.