விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.
இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில் ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார்.
மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.