விஷால் புது அரசியல் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து, “வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட விஷால், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரது இயக்கம் குறித்த கேள்விக்கு, “நற்பணி இயக்கம், குறிப்பிட்ட நாட்கள், பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் செயல்படும். எங்கே பிரச்சனைகள் வந்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு சொல்லிவிடுவார்கள். உடனே நாங்கள் சரி செய்வோம். படப்பிடிப்பிற்கு போகும் போது, அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். அங்கு சின்ன சின்ன அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. அதனால் உதவிகளைப் பூர்த்தி செய்தால் மனசு சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் நற்பணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “உண்மையிலேயே ஒரு ரசிகனா, தமிழ்நாட்டில் இருக்கும் குடிமகனா அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதே என்னுடைய கட்சி பெயர் என்ன, அவருடன் கூட்டணியா, என்பதெல்லாம் தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மக்கள் சேவை செய்ய இத்தனை கட்சி தேவையில்லை. எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான். அதற்கு இப்போது இருக்கிற கட்சிகளே அதிகம். அதைத் தாண்டி ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கையில் தான் வருகிறார்” என்றார்.
மேலும், “அரசியல் என்பது பொதுப்பணி மற்றும் சமூக சேவை. அது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்துட்டு போகிற இடமும் கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்திருப்போம். அந்த வகையில் அனைவரும் அரசியல்வாதி தான். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்வது, அல்லது வரப்போறன்னு சொல்லிட்டு வராமல் இருப்பது...அப்படி எதுவும் இல்லை. அந்தந்த நேரத்தில், அதற்கான காலகட்டத்தில் முடிவெடுக்கப்படும். நடிகர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக ஆவேன் என எனக்கே தெரியாது. ஒரு நடிகனாக 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு கொடுத்த ராதாரவி அண்ணனை எதிர்த்து நிற்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதே போல் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும். அதனால் எல்லாமே அந்த காலம் எடுக்கக் கூடிய முடிவு தான்” என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை நேரம் வந்தால் சொல்லுவேன். இதற்கு முன்னாடி ஒரு முறை கேப்டன் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன் என சொல்லியிருக்கிறேன். அதில் ஒளிவு மறைவு ஒன்னும் கிடையாது. சொன்னாலும் ஜெயிலில் பிடித்து போடமாட்டார்கள்” என்றார். 2026 தேர்தல் குறித்த கேள்விக்கு, “என்னுடைய கணிப்பின்படி 2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” என்றார்