பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16 ஆம் தேதி 3டியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் மோசமான வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூலில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் ரிலீசுக்கு முன்பே இந்து மத உணர்வைப் புண்படுத்தியதாகப் பல்வேறு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ரிலீசுக்கு பின்பும் அது தொடர்கிறது. படம் ரிலீசான முதல் நாளில் திரையரங்கின் முன்பு ஒரு ரசிகர் படம் நன்றாக இல்லை என விமர்சித்திருந்தார். உடனே அருகில் இருந்த ரசிகர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். இதுபோன்று சமூக வலைத்தளங்களில் பலரும் படத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ரசிகர்களை விட ஒரு படி மேலே போய், "ஆதிபுருஷ் பார்த்ததும் தான் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனத் தெரிய வந்தது" என கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.