கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் நேற்று ( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இவ்விரு இடங்களிலும் தொடர்ச்சியாக மீட்பு பணிக்குழு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு நிலச்சரிவுகளில் தற்போது வரை 163-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி 216 பேரைக் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், விஜய், ப்ரித்விராஜ் ஆகியோர் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள, நிதியுதவி தந்து உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் வங்கி விவரங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் விக்ரம் கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.