இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய், விரைவில் சினிமா வாழ்கைக்கு முழுக்கு போடவுள்ளார். அதற்கு முன்னதாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். கடந்த பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த விஜய், கட்சிக் கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது.
இந்த சூழலில் அரசியல் வருகைக்கு பிறகு விஜய்யின் முதல் படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (05.09.2024) வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மறைந்த விஜயகாந்த் முகத்தை ஏஐ தொழிநுட்பம் மூலம் பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளனர். இப்படம் பலரது பாராட்டை பெற்றாலும் சிலரிடம் விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து விஜயகாந்தின் மகன் பிரபாகரன் பேசியுள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோட் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் அப்பா வரும் காட்சிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த காட்சியை எனக்கு நிறைய பேர் அனுப்பியிருந்தார்கள். அதை பார்க்கும் போது உண்மையிலே எனக்கு புல்லரித்துவிட்டது. விரைவில் படம் பார்க்கவுள்ளேன்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விஜய் அண்ணன் மிகப்பெரிய ஸ்டார். இன்னும் முழுமையாக அவர் அரசியலில் இறங்கவில்லை. அவர் மாநாட்டிற்கு பல பிரச்சனைகள் எழுந்திருக்கிறது. அவர் என்ன கொள்கையை பின்பற்றுகிறார் அவருக்கு மக்கள் தரவு எந்த ஆளவு இருக்கிறது என்பதை வைத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். மக்களுக்கு நல்லது செய்ய அவர் கட்சி தொடங்கியுள்ளார். அதனால் அதை அவர் முதலில் பார்க்கட்டும். அதன் பிறகு அவர் யாருடன் கூட்டணி வைப்பார் என பார்ப்போம்” என்றார்.