திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருவதோடு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். இதையடுத்து சமீபத்தில் அக்கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்த திட்டமிட்டிருந்தார். இதற்காக காவல் துறையினரிடம் அனுமதியும் கேட்டு பெற்றிருந்த நிலையில் சில காரணங்களால் மாநாடு வருகிற அக்டோபர் 15ஆம் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க. கட்சி தொடங்கியதற்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், தளபதி விலையில்லா வீடுகள் திட்டம் என்ற முன்னெடுப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் பகுதியில் தொடங்கியது. இதன் மூலம் அங்குள்ள 7 ஏழை குடும்பத்தை தேர்ந்தெடுத்து வீடி கட்டிக் கொடுத்து, வீட்டு உபயோக பொருட்களும் வழங்கியிருந்தனர். தொடர்ந்து அதே மாவட்டத்திலுள்ள பொன்னேரி பகுதியில் 7 ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்த நிலையில், அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் கழிவறை கட்டி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாற்றுத் திறனாளி பெண் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “என் பெயர் புவனேஸ்வரி, எனக்கு கல்யாணமாகி வீட்டுகாரர் இறந்துவிட்டார். எனக்கு அம்மா அப்பாவும் இல்லை. எனக்கு ஒரே ஒரு தம்பி மட்டும்தான் அவரும் இறந்துவிட்டார். என் அண்ணனும் அக்காவும் எனக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். த.வெ.க. கட்சி நிர்வாகிகளிடம், ரொம்ப சிரமமாக இருக்கிறது ஒரு கழிவறை கட்டி தருமாறு கேட்டேன். உடனே அவர்கள் செய்து கொடுத்தார்கள். இதை என்றைக்கும் மறக்க மாட்டேன்” என்று கண் கலங்கியபடி நன்றியை தெரிவித்தார்.