கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் திரைப்படங்களின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படங்களை வெளியிட படக்குழுவினர் வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'விஜய்' நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் அதில் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் 'கைதி' படத்தைத் தொடர்ந்து 'மாஸ்டர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த தீனா இப்படம் குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த தகவல்கள் வெளியான ட்விட்டர் கணக்கு தன்னுடையது அல்ல என நடிகர் தீனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்... "இந்த ட்விட்டர் கணக்கு போலியானது. தயவுசெய்து ரிப்போர்ட் செய்யுங்கள். எனக்கே தெரியாத அப்டேட் எல்லாம் கொடுக்கிறாரு. ஃபேக் ஐடி உருவாக்குவதில் என்ன பயன் என்று தெரியவில்லை. ஒரிஜினல் கணக்கிற்கு 9 ஆயிரம் ஃபாலோயர்கள், போலி கணக்கிற்கு 17 ஆயிரம் ஃபாலோயர்கள்" என விளக்கமளித்துள்ளார்.