லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய விஜய் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, "ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும். பல முறை சொல்லிருக்கேன். இருந்தாலும் ஒரு தடவை க்ளியர் பண்ணிட்டு போயிடுறேன். தமிழ் சினிமா நமக்கு கொடுத்திருக்கிற நட்சத்திர நாயகர்கள் புரட்சி தலைவர் என்றால் அது ஒருத்தர் தான். நடிகர் திலகம் என்றால் அது ஒருத்தர் தான். புரட்சி கலைஞர் கேப்டன் என்றால் அது ஒருத்தர் தான். உலக நாயகன் என்றால் அது ஒருத்தர் தான். சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருத்தர் தான். அதே மாதிரி தல என்றாலும் அது ஒருத்தர் தான்.
உங்க எல்லாருக்கும் தளபதிக்கு அர்த்தம் தெரியும். அதாவது மன்னர்களுக்கு கீழ அவுங்க இருப்பாங்க. மன்னர்கள் ஆணையிடுவாங்க, தளபதி அதை செஞ்சு முடிப்பாரு. என்னை பொறுத்தவரைக்கும் மக்களாகிய நீங்க தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ இருக்கிற தளபதி. நான் அப்படியே இருந்துட்டு போறேன். நீங்க ஆணையிடுங்க அதை அப்படியே செஞ்சிட்டு போறேன்" என்றார்.