விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை 2’. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்க அவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், “சூரிக்கு நன்றி சொல்லி என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன். இவ்ளோ பெரிய ஹீரோ அவருடைய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். எனக்கு மேடையில் பேச வாய்ப்புக் கொடுக்காத ஒருத்தன் படத்தில் கொடுத்திருக்கான்னா யோசித்து பாருங்களேன்? நமக்கு அப்புறம் ஒருத்தன் பேசணுமென்ற நாகரீகம் கருதி விட்டுவச்சுட்டு போவோம் என்ற எண்ணமெல்லாம் சூரிக்கு கிடையாது. எல்லாத்தையும் அவரே பேசிட்டாரு. இந்த படத்தில் ஏற்பட்ட அனுபவம் மிகப் பிரமாண்டம். படத்தில் நான் அதிகம் ரசித்த காதாபாத்திரம் ராஜூ மேனனின் கதாபாத்திரம்தான். படத்தில் அவர்தான் ஐட்டம், ஒரு படத்திற்கு சில சண்டைக் காட்சிகள், பாடல்கள் கவர்ச்சியாக இருக்கும். அதுபோல ராஜூ மேனன் இந்த படத்தில் அனைவரையும் கவரும் வகையில் நடித்திருப்பார். படம் பார்க்கும்போது கண்டிப்பாக ஆடியன்ஸ் அவரை ரசிப்பார்கள்.
கென் கருணாஸ் அழகான குழந்தை. அவனை திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப ரசித்திருக்கிறேன். அவனை நடிக்க வைத்த வெற்றி மாறனுக்கு ரொம்ப நன்றி. நான் பலமுறை அசுரன் படத்திற்குப் பிறகு ஏன் இவ்வளவு பெரிய கேப் விட்ட? என்று அவனை திட்டியிருக்கேன். ஏன்னா அவனுடைய நடிப்பு இந்த படத்தில் நன்றாக இருந்தது. இந்த படத்தில் வரும் சண்டைக் காட்சியில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்திக்கொள்ளாமல் நல்லா கென் நடித்திருந்தான். இன்னும் மிகப்பெரிய விஷயங்களை வாழ்க்கையில் பண்ணுவான்னு நம்புறேன் அதற்கு வாழ்த்துகள். நடிகர் சேத்தனை வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன். முதல் பாகத்தில் ஆடியன்ஸ் அவரைப் பார்த்ததைவிட இரண்டாம் பாகத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தை அவரைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது. அவருடன் நடித்ததில் எனக்கு சந்தோஷம். கலை இயக்குநர் ஜாக் படப்பிடிப்பிற்காகப் போட்ட செட்டை எனக்குத் தெரிந்த சிலரை அழைத்துக் கொண்டு காண்பித்தேன். அந்த படப்பிடிப்பு செட் எங்களை 70களில் சென்று பார்ப்பதுபோல் டைம் ட்ராவல் செய்ய வைத்தது. அதற்கேற்ப ஜூனியர் நடிகர்கள் உடை அணிந்து நடித்திருந்தது மிகவும் ரியலாக இருந்தது.
இளையராஜா சார் ஐ லவ் யூ சார். அவர் இருக்கும் காலத்தில் அவருடைய இசையைக் கேட்டு ரசிப்பதைத் தவமிருந்து வாங்கி வந்த வரமாகப் பார்க்கிறேன். இப்படத்திற்கான ஒரு நிகழ்ச்சியில் அவர் முதலில் வந்திருந்தார். அவருக்குப் பிறகு நான் போனேன். அப்போது யாரும் வராத காரணத்தினால் அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நிறையக் கேள்விகள் அவரிடம் கேட்டேன். அந்த நிகழ்ச்சி முழுவதும் அவர் என்னையே பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். கவிஞனாக இருந்திருந்தால் அந்த தருணத்தை வார்த்தையால் சொல்லியிருப்பேன். அதனால் நடிகனாக சொல்ல முயற்சிக்கிறேன். அந்த நிமிடங்களை முடிந்த அளவிற்கு நான் ரசித்தேன். அப்படியொரு பேரானந்தத்தைக் கொடுத்த இளையராஜாவுக்கு ரொம்ப நன்றி. அவருடைய இசை மட்டுமில்லாமல் அவருடைய பேச்சுகள் மூலமாகவும் நிறையக் கற்றுக்கொண்டேன். அதன் மூலம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயற்சியெடுத்து வருகிறேன்.
விடுதலை 2 பற்றிப் பேசவேண்டுமென்றால். இது முழுக்க முழுக்க வெற்றிமாறன் உரிமை கொண்டாடக்கூடிய படமாகவும் அறிவாகவும் இருக்கும். நாங்கள் அதில் உறுதுணையாக இருந்தது பெருமையாக இருக்கிறது. இந்த படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்துக்கொள்ளக்கூடிய சிறந்த அனுபவமாகப் பார்க்கிறேன். வெற்றி மாறன் என்ற யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரியை நான்கு வருடம் படித்து வாங்கியுள்ளேன். படத்தில் இயக்குநர் என்னிடம் சொல்லும் வசனங்களை முடிந்தளவிற்கு புரிந்துகொண்டு நடிக்க முயன்றேன். அந்த வசனங்களைப் பேசி நடிப்பதோடு மட்டுமில்லாமல் வீட்டிற்குச் சென்று யோசித்து பல பேரிடம் பகிர்ந்து விவாதித்தேன். அந்தளவிற்கு இந்த படத்தின் மூலம் வெற்றிமாறன் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தார். இந்த படத்தின் வாத்தியார் வெற்றிமாறன். அந்த வாத்தியாரிடம் மாணவனாக நான் கற்றதும் பெற்றதும் மிகப்பெரியது. அந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி” என்றார்.