விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த '96' படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் பா.ரஞ்சித்தின் கூகை திரைப்பட இயக்கம் சார்பில் கடந்த ஞாயிறன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் '96' படக்குழுவினர் பங்கேற்று அங்கிருந்த பத்திரிகையாளர்கள், உதவி இயக்குனர்கள், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினர்.
96 பட அனுபவங்கள், வாராவாரம் படம் வெளியாவது என ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்த விஜய் சேதுபதியிடம் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், "சாதி ஒழிப்பு குறித்து நிறைய பேசும் நீங்கள் சாதி ஒழிப்பு குறித்து படம் நடிப்பீர்களா? ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பீர்களா?" போன்ற கேள்விகளை எழுப்பியபோது, சற்று கோபப்பட்டார்.
"நான் சாதி ஒழிப்பு குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசி வருகிறேன், செயல்படுகிறேன். ஒரு திரைப்படம் என்பதை எமோஷனுக்காக எடுக்கமுடியாது. அதுக்கு கதை வேணும், பணம் வேணும். எல்லாம் சரியா அமையணும். 'பரியேறும் பெருமாள்' வெற்றி பெற காரணம் சாதி ஒழிப்பு கருத்து மட்டுமல்ல. அதில் நல்ல சினிமா இருந்தது. அது இல்லைன்னா படம் ஓடாது. ரஞ்சித் என் நண்பர். 'காலா' படம் பார்த்துவிட்டு அன்றே அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். நட்பு வேறு தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும். அமைந்தால்தான் வேலை செய்ய முடியும். அவருக்கும் தோன்ற வேண்டும். சினிமா உணர்ச்சிகளுக்காக செய்யமுடியாது" என்று கூறினார் விஜய் சேதுபதி.
கேள்வி கேட்டவர், மீண்டும் "பின் ஏன் உங்க படத்துக்கு 'சங்குத்தேவன்'னு பேர் வச்சீங்க?" என்று கேட்க, "உங்களுக்கு அப்போ நடந்தது என்னனு தெரியுமா? கேள்வி கேட்பது ஈஸி. அந்த டைட்டில் வைக்கக்கூடாதுன்னு நான் அந்த இயக்குனர்கிட்ட எவ்வளவு சண்டை போட்டுருக்கேன்னு தெரியுமா? இப்போ அந்தப் படமே நடக்கல. அப்போ எனக்கு அறிவு அவ்வளவுதான்னு நினைச்சுக்கங்க. இப்போ அறிவு வளர்ந்துருக்கு. இனி அப்படி ஒரு டைட்டில் வைக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்.