தமிழ்நாடு முழுவதும் (வேலூர் நீங்கலாக) இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் நடிகர்களும் தங்கள் பகுதி வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கம் பகுதியில் கார்ப்பரேஷன் காலனியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்து முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் முதல்ல ஓட்டு போடுற அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். இது ப்ரௌட் மொமண்ட். ஏன்னா, பதினெட்டு வயசுல நம்ம வீட்டுல கூட ஒரு முடிவெடுக்க நம்மை கேப்பாங்களானு தெரியாது. ஆனா, நம்ம நாட்டை யார் ஆளுறதுன்னு உங்ககிட்ட கேக்குறாங்க. நானும் ஓட்டு போட்டுட்டேன். எல்லோரையும் போல நானும் காத்துகிட்ருக்கேன், நல்லது நடக்கும்னு" என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள், "மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. உங்கள் கருத்து என்ன?" என கேட்க, "நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். வாட்ஸ்-அப்ல மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பல சந்தேகங்கள் எல்லாம் வருது. ஆனா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. ஆனா, ஒன்னு மக்களுக்கு அரசியல் குறித்து அறிவும் விழிப்புணர்வும் அதிகரித்துக்கொண்டே இருக்கு. இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் பேச அருகில் சென்றனர். அவர்களிடம் அன்பாகப் பேசிய அவர் அங்கிருந்த குழந்தைகளிடம் கைகொடுத்துப் பேசினார். செல்பி எடுக்க விரும்பியவர்களிடம் "இங்கயுமா" என்று சிரித்துக்கொண்டே செல்பி எடுத்துக்கொடுத்துச் சென்றார்.