நடிகர் விஜய் சேதுபதி 'குரங்கு பொம்மை' இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகும் இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் எனவும் படத்திற்கு 'மகாராஜா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் வில்லனாக பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடித்து வருவதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முன்பு வெளியான தகவலில் குறிப்பிட்டது போல படத்திற்கு 'மகாராஜா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனுராக் கஷ்யப் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இவர்களோடு நடிகை மம்தா மோகன்தாஸ் மற்றும் நட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
போஸ்டரை பார்க்கையில் ஒரு ராஜாவாக கழுகை குறியீடாகக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும் இன்னொரு ராஜாவாக ஓநாயை குறியீடாகக் கொண்டிருக்கும் அனுராக் கஷ்யப்பும் மோதிக்கொள்ளும் காட்சியை பிரதிபலிப்பது போல் அமைந்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.