தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, தனது ரசிகை வீட்டுக்கு திடீர் விஸிட் அடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
தியா தாம்ஸ், 19 வயதாகும் இவர் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகை. இவருடைய வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8:30 மணியளவில் விஜய் தேவரகொண்டா நேரடியாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 'டியர் காம்ரேட்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் முன்னதாக விஜய் பங்கேற்றிருந்தார்.
விஜய்யின் திடீர் விசிட் குறித்து பேசிய தியா, "என் கற்பனையையும் தாண்டிய விஷயம் இது. என் நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் தூரத்திலிருந்து கூட ஒரு நட்சத்திரத்தைப் பார்த்ததில்லை. விஜய் தேவரகொண்டாவைப் பார்ப்பேன் என்று நினைத்ததே இல்லை. எனது சகோதரருக்கு விஜய் வருவது தெரிந்திருந்தும் அவர் ரகசியமாக வைத்திருந்தார். குடும்பத்தில் வேறு யாருக்கும் முன்னரே தெரியாது.
நான் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் அவரிடம் கேட்க முடியாமல் போனதில் வருத்தம் ஏதும் இல்லை. ஏனென்றால் ஒரு பெரிய நடிகர் உங்கள் வீட்டுக்கு வந்து தேநீர் அருந்துவது எல்லா நாளும் நடப்பதில்லை. அவர் எல்லா விருந்தாளிகளைப் போல எளிமையாக வந்து போனார். எனது பாட்டியிடம் சென்று தமிழில் உரையாடினார். அவர் வந்து சென்ற இன்ப அதிர்ச்சியில் என்னால் இரவு ஒழுங்காகத் தூங்க முடியவில்லை.
அவருடன் ஒரு நல்ல செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனது மொபைல் கேமரா அவ்வளவு நன்றாக இருக்காது. அவருடன் வந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். அதிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
இச்சந்திப்பை விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வருகிற 26ஆம் தேதி டியர் காம்ரேட் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிறது.