மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி (வயது 72) நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 03:05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதையடுத்து அவரது உடலை மருத்துவ மாணவர்களின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அதே மருத்துவமனையில் தானமாக அவரின் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.
சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் எம்.பி., உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகரும் ம.நீ.ம. கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான த.வெ.க. கட்சியின் எக்ஸ் தளப் பதிவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.