போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீட்டு விழா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துக்களை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரு விழிப்புணர்வு குறும்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்தும், ஹெல்மட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறித்தும் சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் ‘நீங்க ரோடு ராஜாவா?’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாந்தனு, யோகி பாபு, அர்ச்சனா, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனைத்து குறும்படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
விழாவில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “காவல் துறை முன்வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை, எனக்கு இயக்க எப்போதுமே 100 சதவீதம் ஆர்வம் இருக்கும். அது போன்ற முன்னெடுப்பு எப்போதுமே நேர்மையாக இருக்கும். இந்த குறுப்படங்கள் மக்களுக்கு ஈஸியாக புரியுர மாதிரி எளிய முறையில் எடுத்துள்ளோம். வெளிநாடுகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவார்கள். ஆனால் நம்ம ஊரில் கொஞ்சம் மெத்தனமாகவே பின்பற்றுவார்கள். எல்லாருக்குமே தனிப்பட்ட முறையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது சரியாகும். நானும் போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். என்னையுமே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாங்க. ஆனால் நான் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டேன். அப்படி ஆனாலும் கூட காவல்துறை சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிற போது ரொம்ப பெருமையாக சந்தோஷமாகவும் இருக்கும்” என்றார்.