லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ரிலீஸாகுவதற்கு முன்பே சில சர்ச்சையில் சிக்கியுள்ளது படக்குழு. இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இப்படித் தொடர்ந்து சில சர்ச்சைகளில் சிக்கிவந்தாலும் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், எக்ஸ் பக்கத்தில் விக்னேஷ் சிவன் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். லியோ படம் தொடர்பாக விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் சண்டை என்ற அர்த்தத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு நபர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை விக்னேஷ் சிவன் லைக் செய்தார். இதனால் விக்னேஷ் சிவனை விமர்சித்து விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இதையடுத்து மன்னிப்பு கேட்டு பகிர்ந்துள்ள பதிவில், "அன்பான விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களே, குழப்பத்திற்கு மன்னிக்கவும். வீடியோவின் உள்ளடக்கம், ட்வீட் உள்ளிட்டவை பார்க்காமல், லோகேஷின் நேர்காணலைப் பார்த்ததால், வீடியோவை லைக் செய்துவிட்டேன். அவரது படங்கள், நேர்காணல்கள் மற்றும் அவர் பேசும் விதத்திற்கு பெரிய ரசிகன் நான்.
இதே போல் ஒரு வீடியோவில் நயன்தாரா சூப்பராக நடித்திருக்கும் ஷாட் ஒன்றை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்றாகும், அதனால் உடனடியாக அந்த பதிவையும் லைக் செய்துவிட்டேன். எனது தவறு. இரண்டு பதிவில் உள்ள வீடியோவையோ அல்லது பதிவையோ படிக்கவில்லை. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Dear Vijay sir fans , Loki fans … sorry for the confusion 🙏 without even seeing the msg , the context or the content of the video or the tweet , by jus seeing Loki’s interview I liked the video !
cos am a big fan of his works and his interviews and the way he speaks !
Am also… https://t.co/JIJymxI2mJ— VigneshShivan (@VigneshShivN) October 8, 2023