சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை எடுத்தார். பின்பு கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை கரம் பிடித்தார். இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் இயக்க கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அஜித்தை இயக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். இப்போது 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்க்கை, சினிமா, குடும்பம் என பலவற்றை பற்றி கருத்து கூறி வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த வகையில் கிரிக்கெட்டை பற்றி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சஞ்சு சாம்சன், உண்மையில் நீங்கள் பல வழிகளில் சிறந்தவர். நீண்ட நாட்களாக உங்களது கிரிக்கெட்டை பார்த்து ரசித்து வருகிறேன். நீங்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரிய சக்தியாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் மற்றும் பிரார்த்திக்கிறேன்.
தோனிக்கும் உங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. கடினமான தருணங்களை சாமர்த்தியமாக கையாள்வது, கடைசி வரை நின்று போராடுவது போன்ற குணங்களை சொல்லலாம். இவை அனைத்தும் இந்திய கிரிக்கெட்டில் உங்களுக்கு ஒரு சூப்பர் பவராக அமையப் போகிறது. இந்தத் திறமையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவர் வரலாற்றை உருவாக்க இங்கு வந்துள்ளார். மேலும் அவர் ஒரு மறக்க முடியாத இடத்தை உருவாக்குவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.