மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்கு சிறுவர்கள் மற்றும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் பெயரில் உருவாக டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன், மிஷ்கின், ராம், நெல்சன் உள்ளிட்ட பலரும் நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், சூரி, த்ருவ் விக்ரம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் பாரதிராஜா மற்றும் சிம்பு ஆகியோர் காணொலி வாயிலாகப் பேசி அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசுகையில், “தமிழில் ஒருவரை பற்றி அவரே படமெடுப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். இப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் பண்ணுவது அடுத்த கட்ட சினிமாவாக பார்க்கிறேன். ஒரு இயக்குநர் பொதுவெளியில் நான் இப்படிப்பட்டவன், நான் இங்கிருந்து வருகிறேன் எனச் சொல்லும்போது அவருடைய உலகத்தை பார்வையாளர்களாகப் புரிந்து கொள்வது ஒரு பக்கம். அதே சமயம் அந்த இயக்குநருக்கு அவருடைய கடந்த காலத்தை இப்போது இருக்கும் இடத்திலிருந்து புரிந்து கொள்ள உதவுவது இன்னொரு பக்கம். அந்த வகையில் இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருக்கிறது.
அது மட்டுமில்லை. நம்ம எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் கஷ்டங்கள் இருக்கிறது. அதனால் துவண்டு போய், இனிமேல் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமைக்கு செல்கிறோம். அப்படி நினைக்கிறவங்களுக்கு நம்மை விட பல சவால்களையும் இன்னல்களையும் சந்தித்து ஒருவன் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கிறான் என்பதை சொல்லும்படியாக இந்த படம் இருக்கிறது. இந்த படம் மூலம் மாரி செல்வராஜ் தன்னை முன்வைக்கும் போது, சமூகத்தில் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராக இன்ஸ்பிரேஷனாக மாறுகிறார். அந்த அளவிற்கு இந்த படத்தை ரொம்ப முக்கியமான படமாக பார்க்கிறேன்.
இதுவரையில் மாரி செல்வராஜின் படங்களை விட இந்த படத்தில் அவருடைய மேக்கிங் உயர்ந்திருக்கிறது. ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ஒரு இயக்குநராகவும் அவர் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறார். எப்போதுமே ஒரு இயக்குநருக்கு சிறந்த ஒன்று அவர் பண்ணும் அடுத்த படம்தான். அதனால் இந்த படத்தை விட சிறந்த ஒன்று அடுத்த படத்தில் பண்ணப் போகிறார். அதற்காக நான் எப்போது காத்திருக்கிறேன். இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாருமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே இருந்தார்கள். யாரும் நடித்தது போலவே இல்லை.” என்றார்.
பின்பு அவரிடம் தொகுப்பாளினி, “உங்கள் வாழ்க்கையில் நடந்த எதாவது சம்பவத்தை நீங்க பயோகிராபியாக எடுக்க வாய்ப்புகள் உள்ளதா” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி அப்படி ஒன்னு ட்ரை பண்ணினேன். என்னோட இளமை பருவத்தில் கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்த ட்ரை பண்ணோம். அதை வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்தேன். ஆனால் வாழை போன்ற ஒரு படம் வந்த பிறகு அந்த படம் எதற்கு” என சிரித்தபடி பதிலளித்தார்.