21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தொழில், விக்ரம் சுகுமாரனின் ராவணக் கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. விருது வாங்கிவிட்டு மேடையில் பேசிய வெற்றிமாறன், “எப்போதுமே இது மாதிரியான படங்கள் எடுக்கும்போது ஒரு பேலன்ஸ் இருக்கணும். சில இடங்களில் கதையில் சமரசம் பண்ணிப்போம். சில இடங்களில் ஜனரஞ்சகத்தன்மைக்காக சமரசம் செய்துகொள்வோம். என்னுடைய படங்களில் நிறைய சீன்களில் டப்பிங் சரியாக இருக்காது. ஆனால் எல்லா படங்களையுமே நிறைய குறைகளோடும் தவறுகளோடும் தான் எடுத்து முடிக்கிறோம். இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறார்கள். அதே சமயம் கதையின் நோக்கம் படத்தின் குறைகளை மறக்கடிக்க செய்கிறது.
இது மாதிரி கதையாடல்கள் சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தும் என்ற நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்காகத்தான் இந்த அங்கீகாரம் என நினைக்கிறேன். அடுத்தடுத்து செய்யும் முயற்சிகளில் சமரசங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சரியாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். விடுதலை மாதிரியான படத்திற்கு ஜனரஞ்சகமான ஆதரவும் திரைப்பட விழாக்களின் அங்கீகாரமும் பெரிய ஊக்கமளிக்கிறது. நோக்கம் பத்தி பேசும்போது அயோத்தி பத்தி பேச வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொடர்புபடுத்தி கொள்ளக்கூடிய ஒன்று. கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் ஒரு நல்ல நோக்கத்தோடு வந்த படம். அந்த இயக்குநரின் நோக்கத்தை ஆதரித்த மொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்கள்” என்றார்.