ஹேமா கமிட்டயின் ஆய்வறிக்கைக்குப் பிறகு திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து நடிகைகள் பெண்கள் கொடுக்கும் புகாரின் பேரில் சம்பந்தப்பட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா பத்திரிக்கை நிறுவனம் நடத்திய நேர்காணலில் ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் இருவரும் திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அப்போது பேசிய வெற்றிமாறன், “சினிமா துறையில் ஒரு பகுதியாக இருப்பதால் கண்டிப்பாக இதைப் பற்றிப் பேச வேண்டும். ஒரு பெண் தானாக முன் வந்து பாலியல் வன்கொடுமை நடந்தது என்று சொல்லும்போது. ஏன் இவ்வளவு நாள் சொல்லாமல் இப்போது வந்து சொல்வதின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு ஆளாகிறார். ஒரு நபர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று ஒரு பெண் சொன்னால், நாம் அவர் பக்கம்தான் நிற்க வேண்டும்.
குற்றம் சுமத்தப்பட்ட அந்த பிரபலமானவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் வந்ததில்லை என அவர் பக்கம் நிற்பது சரியானதல்ல. குற்றம் சுமத்தப்பட்ட நபர் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், அந்த குற்றத்தைத் தான் செய்ய வில்லை என நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் உள்ளது. இந்த அளவிற்கு பலத்தை நாம் பெண்கள் பக்கம் கொடுக்க வேண்டும். ஏன் முன்பே சொல்லவில்லை..? அந்த பெண் சம்மதம் இல்லாமல் நடந்திருக்குமா? என்று இந்த சமூகம் மேலும் புண்படுத்துகிறது. இது போன்ற விஷயங்கள் மாற வேண்டும் என்று நினைக்கிறேன்”என்றார்.