இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அந்த வகையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். மேலும் அங்கிருந்தவர்களுடன் உரையாடல் மேற்கொண்டு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அப்போது கதாநாயகர்களைத் தலைவர்களாகப் பார்க்கக் கூடாது என்று பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியது, "எம்.ஜி.ஆர் அளவுக்கு எந்த ஒரு நடிகரையும் இப்போது ரசிகர்கள் பின்பற்றுவதில்லை என்று சொல்வார்கள். அவருக்கு முன்பு இருந்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். நாம் எல்லோரும் கதாநாயகர்களை அவர்களின் பிம்பங்களை கொண்டாடுபவர்கள். எப்போதும் அப்படித்தான் இருந்துள்ளோம். இன்றைக்கு அது அதிகமாகத் தெரிகிறது. சில சமயங்களில் அது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அதை எங்க சொல்லலாம் என்று யோசித்து வந்தேன். அதை இப்போது சொல்கிறேன். நடிகர்களை தலைவன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களின் புகழ், இமேஜ் எல்லாம் ஓகே. ஆனால் அவர்களை தலைவர்கள் எனக் கூப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது. அதை பண்ணாமல் இருக்கலாம். முன்னாடி இருந்த நடிகர்கள் அரசியலோடு தொடர்பில் இருந்தார்கள். அவர்களைத் தலைவர் என்று கூப்பிடுவது சரியாக இருந்தது. இன்றைக்கு இருக்கிற நடிகர்களை அப்படி கூப்பிடத் தேவையில்லை என நினைக்கிறேன்" என்றார்.