வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த பாலன் இப்போது ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸீன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரையிலர் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரிஸ் கடந்த 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ் தொடர்பாக நக்கீரன் ஸ்டியோ யூட்யூபில் பேசிய வசந்த பாலன், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது சக இயக்குநர்களோடு படங்கள் குறித்து பேசியது தொடர்பாக பகிர்ந்த வசந்த பாலன், “ஷங்கர், லிங்குசாமி, சசி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் இவங்களோட எப்போதுமே தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன். இந்தி சினிமாவுடைய வீழ்ச்சி, கே.ஜி.எஃப்புடைய வெற்றி எனப் பல்வேறு பார்வையில் சினிமாவின் இப்போதைய நிலைகுறித்து விவாதிப்பேன். அதன் மூலம் ஒரு விஷயத்தை கண்டடைய முடியும்.
பூமணியின் வெக்கை நாவலை நான் படம் பண்ண வேண்டியிருந்தது. ஒரு அப்பா கொலை பண்ண பையனை காப்பாத்த போராடுறாரு, கடைசியில கோர்டுல சரணடைஞ்சிடுவாரு. இதை எப்படி படமா பண்றதுன்னு பண்ணாம விட்டுட்டேன். ஆனால் அசுரன் பார்த்தவுடன் சர்பிரைஸா இருந்துச்சு. நாவலை திரைக்கதையா வெற்றிமாறன் எப்படி அணுகியிருக்கிறார் என்பதைப் பார்த்தேன்.
அடுத்து வாடிவாசல் பண்ண போறார். வாடிவாசல் முதலில் லிங்குசாமி பண்றதா இருந்தது. அப்புறம் நம்ம ட்ரை பண்ணுவோம் எனத் திரைக்கதை அமைக்க முயற்சி செய்தேன். வெறும் ஜல்லிக்கட்டை வைத்து எப்படி திரைக்கதை அமைக்க முடியும் என அப்போது விட்டுவிட்டேன். இன்னைக்கு தமிழ் சினிமா எதிர்பார்க்கிற படமாக அது மாறியிருக்கு. இவ்வாறு தொடர்ந்து இயக்குநர்களுடன் ஃபோனில் படங்கள் குறித்து பல்வேறு விஷங்கள் பேசுவேன்” என்றார்.