இந்த ஆண்டு 'விருமன், 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' என அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் 'பொன்னியின் செல்வன்' ரூ.430 கோடியும் மற்றும் 'சர்தார்' படம் ரூ.100 கோடியும் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தனது 25வது பட அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்க படத்திற்கு 'ஜப்பான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஜி.வி.பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் 'ஜப்பான்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்க இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பது, "நடிகர் விஷ்ணு விஷாலுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடக்க வேண்டிய படம். பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு நடக்கவில்லை.
இப்போதும் அவ்வப்பொழுது அந்தப் படத்தைப் பண்ணலாம் சார் என்று விஷ்ணு அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடுவார். அந்தக் கதைக்கு வைத்த தலைப்பு. தலைப்புகளில் நமக்கு இருக்கும் அதீத காதல் இருக்கே... அது மிகப் பெரியது. இதை விட நல்ல தலைப்பைக் காலம் நம் கைகளில் தரலாம். ஜப்பான் வெல்லட்டும். இயக்குநர் ராஜு முருகனுக்கும் கார்த்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.