வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் 'சுய் தாகா - மேட் இன் இந்தியா'. இந்த ஆண்டின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இடம்பெற்றுள்ள இப்படத்தை 'யாஷ் ராஜ் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக ஆதித்யா சோப்ரா மற்றும் மணீஷ் சர்மா ஆகியோர் இணைந்து தயாரித்து, தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இயக்கியுள்ளார். இதில் 'மௌஜி' என்ற கதாபாத்திரத்தில் வருண் தவான் நடித்துள்ளார். மேலும் சைக்கிள் சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம் என்பதால் சைக்கிளை அதிகம் பயன்படுத்தினால் படத்தில் நன்றாக இருக்கும் என இயக்குனர் சரத் கட்டார்யா வருணிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சைக்கிள் பயன்பாடு குறித்து நாயகன் வருண் தவான் பேசும்போது....
"மௌஜி' சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள் தினமும் சுமார் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என்றார். மேலும் இது குறித்து அனுஷ்கா சர்மா பேசும்போது.... "வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என்றார். 'சுய் தாகா - மேட் இன் இந்தியா' படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.